சிலுவைப் பாதை
பாவம் போக்கிய பாடுகள்
முன்னுரை:
பேதமையை பெயர்த்தெடுக்க
போதகராய் பிறந்தார்.
பாதகற்கு பதிலாக
பாவச்சிலுவையை சுமந்தார்
சிந்திய இரத்தத்தால், நம்
சிந்தையில் நிறைந்தார்.
கல்வாரி மலை மேலே
கள்வர் மத்தியில் மரித்தார்.
அவரது வாழ்க்கை பாதையின் உச்சக்கட்டம்
சிலுவை பாதை.
அந்த பாதையில், அவரை
சந்தித்தவர்கள் பார்வையில்
சிந்திப்போமா பாடுகளை!
முதல் நிலை: இயேசு சாவிற்கு கையளிக்கப்படுகிறார்!
பிலாத்துவின் வார்த்தைகளில்
இளகிய மனது என்னது அல்ல
கள்ளர்களை, கலககாரர்களை
கசையடிக்கு கையளிக்குமுன்
கணபொழுதும் சிந்தித்ததில்லை
கொலைகார்களை
தீவிரவாதிகளை
சிலுவை சாவிற்கு
தீர்ப்பிட சிரிதளவும்
தயங்கியதில்லை
ஆனால்,
இவரை கண்டதும் என்
இருகிய மனதும்
இளகியதே
யூதரின் அரசராம் இவர்!
அடிமைப்படுத்துபவனே
அரசன் என்றிருந்த நான்,
அரைகுறை ஆடையில்
அடிப்பட்டு நொடிந்து நிற்கும்
அரசனைப் பார்க்கிறேன்.
ஓலமிடும் ஓநாய்கள் நடுவில்
செம்மறி ஆடாய் நின்றாலும்
இவர் முகத்தில் பயமேதும் இல்லையே
பார்த்தியோனின் கடவுள்களை வணங்கும் நாங்கள்,
வெளியில்,
சட்டமும் சாட்டையும் ஏந்தி
அதிகாரமும் அகங்காரமும் கொண்டு அலைகிறோம்!
உள்ளுக்குள் நடுநடுங்கி குழம்பி தவிக்கிறோம்.
உண்மையை உறைக்க வந்தவராம்
உண்மையை உணர முயல்கிறேன்
கடவுளின் மகனாம் இவர்
அவரது கடவுளை அறிய விழைகிறேன்.
தவறேதும் காணவில்லை இவரிடம், ஆனால்
தவறான தீர்ப்பளிக்க தள்ளப்பட்டேன்!
கைகழுவி இவரை சாவிற்கு
கையளிக்க தயாராகி விட்டேன்
சிம்மாசனத்தில் அமர்ந்து, ஒரு
சிறுநரியாய்
சிங்கத்திற்கு தீர்ப்பு வழங்குவது போல் உணர்கிறேன்!
---------------
செபம்:
எங்கள் அன்பு இயேசுவே,
நீர் சாவை எந்த பயமுமின்றி எதிர்நோக்கினீர்.
இன்று பல விதமான பயத்துடன் வாழும் மக்களுக்கு
நீரே தைரியம் தந்தருளும்.
இவ்வுலகில் சித்திரவதைப்படுவோர் மற்றும் அநியாயமாக
நடுத்தப்படுவோர், கூட நீர் இருந்து அவர்களுக்கு
ஆறுதல் தந்தருளும்.
---------------
இரண்டாம் தலம்: இயேசு சிலுவையை சுமக்கிறார்!
இயேசு பார்வையளித்த ஒருவனின் வார்த்தைகளில்
இரணமான அவரின் தோள்களில்
கணமான சிலுவையை சாய்த்தார்கள்!
கொலையை ஒரு விளையாட்டாய் கருதும் ரோமர்கள்!
பார்வையின்றி பரிதவித்த
பாவி நான்!
இருண்ட என் வாழ்வில்
கருணையின் வடிவம் நீ,
நீங்கா ஒளி தந்தாய்!
இங்கு இருள் சூழுதையா
எங்கள் வாழ்வின் ஒளி நீ
எங்கு செல்கின்றாய்!
பார்வை தந்த உந்தன்,
பாடுகளை
பார்க்க முடியாமல் பார்க்கிறேன்!
எத்தனை புதுமைகள்! எத்தனை உவமைகள்!
எத்தனை எத்தனை நம்பிக்கை அளிக்கும் நல்மொழிகள்!
அத்தனையும், துயரில்
தத்தளித்த எங்களுக்கு, புது
வாழ்வளித்ததே!
பார சிலுவை,
பாவ சிலுவை,
திருமகன் உன் தோள்களில்
திருச் சிலுவையாக
மாறும் புதுமையை காண்கிறேன்!
----------------------
செபம்:
எங்கள் அன்பு இறைவா!
அக்கிரமத்தையும், அநீதியையும் எங்கள்
நடுவில் பார்க்கும்போது, பயந்து,
தடுக்க எந்த முயற்சியும்
செய்யாது, எங்கள் மகிழ்ச்சி முக்கியமென
மற்றவர்களை புறக்கணிக்கிறோம்.
எங்களின் கடின மனதை மன்னித்து, மனமாற்றம்
தந்தருளும்!
-----------------
மூன்றாம் தலம்: இயேசு முதன் முறையாக கீழே விழுகிறார்.
செபதேயுவின் மகன் புனித யாகப்பர் வார்த்தைகளில்.
என் இறைவன் இடறி விழ
என் இதயம் குமுறி அழ
செயலிழந்து நின்றேன்! நான்
செபதேயுவின் மகன் யாகப்பன்!
மலை மேல் அழைத்து சென்று
மலைத்துப் போய் நாங்கள் நிற்க
உருமாறி கதிரவன் போல
ஒளிர்ந்த என் இறைவன்
நிலைத் தடுமாறி விழுவது முறையா!
தோட்டத்தில் நீர் இரத்த வேர்வை வேர்க்க
தலைசாய்ந்தோம் கண் அயர்ந்து.
இக்கூட்டத்தில் கொடிய சிலுவை சுமக்க
தலை மறைந்தோம் உயிர் பயந்து.
தூக்கிவிட யாருமின்றி எழுந்தாய்
இறைமகன், நீ இன்று!
தூக்கிலிட்டாலும் பறைசாற்றுவேன் துணிவாய்
என் இறைவன், நீ என்று!
-------------------------
செபம்:
எங்கள் அன்பு இறைவா!
நாங்கள் உமது அன்பின் பாதையைவிட்டு
இடறிவிழும் ஒவ்வொரு முறையும்,
உம் அன்பினால் எழச்செய்து, உமை நோக்கி
வர வரம் தந்தருளும்.
------------------------
நான்காம் தலம்: இயேசு தன் தாயை சந்திக்கிறார்!
அன்னை மரியின் வார்த்தைகளில்
என் மகன் காலில் சிறு முள் தைத்தாலும்
பதைபதைக்கும் என் மனது
இன்று முள்முடி சூடி முகமெல்லாம் இரணமாய்
ஏன் விடிந்தது இந்த பொழுது
பன்னிரண்டு வயதில் அவன்
காணாமல் போக
கண்ணிரண்டிலும் கண்ணீரும் கவலையும்
கண்டெடுக்கும் வரை!
இன்று கண்டெடுத்தேன் இக்கோலத்தில்.
கண்கள் இருண்டன! கால்கள் துவண்டன!
கண்ணீரும் இக்காட்சியைக் காண பொறுக்காமல்
வற்றிப் போய் வர மறுத்தது!
"உன் இதயத்தை ஒரு வாள் ஊடுறுவும்" என
சிமியோன் சொன்னது,
தெளிவாய் ஞாபகம்.
என் இதயத்தை ஒரு வாள் அல்ல
ஓராயிரம் வாட்கள் ஊடுறுவ உணர்ந்தேன்.
தேற்றுதல் தர அவர் முகத்தை பார்த்தேன்!
அந்த இரணமான முகத்தின்
தெளிவான அமைதி
எனைத் தேற்றியது!
----------------------------------
செபம்:
எங்கள் அன்பு அன்னையே!
உமது இதயம் துயரால் பதற
உமது மைந்தனின் சிலுவைப் பாதையில்
அருகிருந்து ஆறுதல் அளித்தீர்.
எங்கள் வாழ்க்கையின் சுமைகளை
நாங்கள் சுமக்கையில்
அருகிருந்து ஆறுதல் அருள்வாய் அம்மா!
------------------------------------
ஐந்தாம் தலம்: இயேசுவிற்கு சீமோன் சிலுவை சுமக்க உதவுகிறார்
சீரேனே ஊரனாகிய சீமோனின் வார்த்தைகளில்
சீரேனே ஊரனாகிய நான்
சிரியவன் அல்ல, பார்வைக்கு மிக பெரியவன்!
உழுது முடித்து, நான்
ஊர் பார்த்து செல்ல, வழியில்
புழுதி கிளப்பி போனது ஒரு கூட்டம்.
ஆர்வத்தில் அருகில் சென்றேன்!
பரிதவித்து நிற்கும் பெண்கள்,
சீற்றம் கொண்ட சிப்பாய்கள்
நடுவில், சோர்ந்த ஒரு மனிதன்!
அவர் தோளில் பாரச் சிலுவை!
அவர் துவண்டு விழுமுன் என்னை தோள்கொடுக்க
ஆணையிட்டார்கள்!
ஆணவக்காரர்கள்!
அவமானத்துடன்
அடிப்பணிந்தேன்!
அறியவில்லை அன்று!
அது அரிதாய் கிடைத்த விருதென்று!
-------------------------------------------
செபம்:
எங்கள் அன்பு இயேசுவே!
உமது பாரச் சிலுவையை சுமக்கும் பாக்கியத்தை
சீமோனுக்கு அளித்தீர்.
பிறரின் சுமைகளை நாங்கள் பகிர்ந்துக்கொள்ள
தொண்டுள்ளம் தந்தருளும்.
---------------------------------
ஆறாம் தலம்: வெரோணிக்கம்மாள் இயேசுவின் முகத்தை துடைக்கிறார்
வெரோனிக்கம்மாளின் வார்த்தைகளில்
கண்ணீருடன் வரும் என் குழந்தையின் முகத்தை
கவலையுடன் துடைத்திருக்கிறேன்.
களைத்துப்போய் வரும் கணவனின் முகத்தை
கனிவுடன் நான் துடைத்திருக்கிறேன்
கனவிலும் நினைக்கவில்லை! என் கடவுளின்
முகத்தை துடைப்பேன் என.
கொடிய தீர்ப்பின்
துயரம் தாக்க
தொடர்ந்தேன் என்
தேவனின் பாதையில்,
பல பெண்களுடன்!
அந்த அழுது புலம்பும் பெண்கள் நடுவில்
அமைதி சொரூபமாய் அவரது அன்னை!
இயேசுவை அருகில் கண்டு வந்ததில்
கண்ட அமைதியோ!
சிப்பாய்கள் தாண்டி இயேசுவின் முகம்
லேசாய் தெரிய,
புண்பட்ட அவர் முகத்தில்
புழுதியும் இரத்த சகதியும்!
"துயருற்றோர் பேறுபெற்றோர்
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்"
அவர் திருவாய் மலர்ந்த வார்த்தைகள்
தெளிவாய் என் மனதில்!
சீறும் சிப்பாய்களை தாண்டி சென்றேன்
என் இயேசுவிடம்!
எனது துணியால் அவரது முகத்தை
துடைக்க
அன்னையிடம் கண்ட அதே அமைதி
அவர் முகத்தில்!
காவலர்கள் தள்ளிவிட
விழுந்தேன்! ஒன்று உணர்ந்தேன்!
உண்மையில் துயருற்றது நான் தான்!
ஆறுதல் அளித்தது அவரது முகம்!
அவர் முகம் பதிந்த துணியில்
முகம் புதைந்து அழுகின்றேன்!
----------------------------
செபம்:
எங்கள் அன்பு இயேசுவே!
இந்தத் தருணத்தில், பொதுநலம் கருதுவோரையும்
மற்றவரின் கண்ணீரை துடைப்பவரையும்
நினைவு கூறுகின்றோம்.
தாழ்ந்தவர்களை உதாசீனப்படுத்தியதர்க்காகவும்,
எங்களுக்காக பாடுபட்டவர்களை மறந்ததற்க்காகவும்
எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்.
---------------------------
ஏழாம் தலம்: இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்!
புனித இராயப்பர் வார்த்தைகளில்
ஒரு முறை
இரு முறை அல்ல, உம்மை
மும்முறை மறுதலித்தவன் நான்!
உம்மோடு
தண்ணீரில் நடந்தவன், இன்று
கண்ணீரில் மிதக்கிறேன்!
என் பாதத்தை நீர் கழுவ நான் மறுக்க,
உம்மோடு பங்கில்லை என்று நீர் சொன்னவுடன்
பாதத்தைக் கொடுத்தேனே!
பாரச் சிலுவை சுமந்து, நடந்த உம்
பாதங்கள் நோகுதையா
பாவி நான், உம் துயரத்தில்
பங்கெடுக்க பயந்தேனே!
பாரம் தாங்காமல்
பாதையில் விழுகின்றீர்!
நீர் இளைப்பாற, உமது
பாதையில், ஒரு
பாறையாய்
நான் இருக்க விழைகின்றேன்.
-----------------------------
செபம்:
எங்கள் அன்பு இயேசுவே!
பவீனமான எங்களுக்கு,
அன்றாட வாழ்வின் சிலுவைகளை
சுமக்கவும், தவறி விழுந்தாலும் திரும்ப
எழுந்து நடக்கவும், பலத்தைத் தந்தருளும்.
-----------------------------
எட்டாம் தலம்: இயேசு எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்
எருசலேம் பெண்களின் வார்த்தைகளில்
அன்பர் இயேசுவின்
அருள் மொழிகள், எங்கள்
அடிமை வாழ்வின்
ஆத்ம சுதந்திரம்
இது,
அவரின் சிலுவைப் பாதையின்
கடைசிப் படிகள், எங்களுக்கு
மிஞ்சியதோ
அழுகையும் புலம்பலும் மாத்திரம்.
இயேசுவின் கடைசி பார்வைக்காக
காத்திருந்த வேளையில்
அவரின் கடைசி வார்த்தைகளைக் கேட்டோம்!
"அழாதீர்கள் எனக்காக!
அழுங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக" என்றார்!
அவரின் வார்த்தையில் ஒரு ஆதங்கம் இருந்தது.
தீர்வு நாளின் நிகழ்வுகளுக்கு
எங்களை ஆயத்தம் செய்யும் வார்த்தைகள்!
மனம் வருந்தி மனமாற்றம் பெற
அழைப்பு விடும் வார்த்தைகள்!
அவரின் வார்த்தைகள் எங்களை
ஆழமாய் தைத்தன!
உண்மையில் மிஞ்சியது,
அழுகையும் புலம்பலும் அல்ல!
மனுமகனின் மாறாத அன்பும்
மீட்பின் நம்பிக்கையுமே.
------------------------------
செபம்:
ஆறுதலின் ஆண்டவரே!
இன்று உலகில் போரால், இறப்பால், இழப்பால்
துயரப்படும் அனைவருக்காகவும் வேண்டுகிறோம்.
அவர்களை நீரே உமது அன்பால் ஆறுதல்படுத்தியருளும்.
உமது எடுத்துக்காட்டைப் பின்பற்றி நாங்களும்
அன்பையும் ஆறுதலையும் பரப்ப அருள் புரியும்.
-------------------------------
ஒன்பதாம் தலம்: இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்.
யூதாஸ் ஸ்காரியூத் வார்த்தைகளில்
ரோமரின் இராச்சியத்தை,
முடிவுகட்டும் மெசியாவாக
உமை நான் எண்ணினேன்!
நான் நினைத்த மெசியா,
நீரில்லை என நினைந்து,
யூதக் குருக்களின் வெள்ளிக் காசுக்கு இரையானேன்!
கடைசி இரவுணவில்,
என்னை நீர் கண்டறிந்தும்
என் கண்கள் திறக்கவில்லை!
கன்னத்தில் முத்தமிட்டு
காட்டிக் கொடுத்தேன்!
கலகக்காரன் நான், இன்று
கலங்கிப் போய் நிற்கிறேன்!
ஒவ்வொரு முறை நீர் விழும் போதும்
"பணிவிடை பெறுவதற்கன்று
பணிவிடை புரியவே வந்தேன்" என்ற உமது
தாழ்மையான வார்த்தைகள், நினைவிற்கு வர
தாழ்ந்து தலைக் குனிந்தேன்!
சிலுவையின் சுமை உமை சாய்க்க
பாவ சுமை எனை அழுத்தியது
மன்னிப்பின் மண்ணவனே!
என்னை மன்னிக்க எனக்கு தெரியவில்லை
வாழ்க்கையிலிருந்து விடைபெறுகிறேன்!
----------------------------------------------
செபம்:
எங்கள் அன்பு இயேசுவே!
நீர் சிலுவை சுமந்து, பலமுறை விழுந்து
தாழ்மையுடன் இவ்வுலகத்தை பாவ
தாழ்நிலையிலிருந்து மீட்டீர்.
நாங்கள் மீண்டும் மீண்டும்
பாவசகதியில் விழாமல் காத்தருளும்.
---------------------------------
பத்தாம் தலம்: இயேசுவின் ஆடை களையப்படுகிறது
இயேசுவின் பிறப்பை வானதூதர் வழியாகக் கேட்ட ஒரு
இடையன் வார்த்தைகளில்
பெத்தலகேம் ஊரின் இடையன் நான்!
இளைஞனாய் இருந்தபோது
இயேசு சிறுக் குழந்தையாய்
தீவணத்தொட்டியே தொட்டிலாய்
படுத்திருக்கப் பார்த்தவன் நான்!
வானதூதர் அறிவித்த மீட்பரின்
எளிமையை எண்ணி வியந்தவன் நான்!
அவரது பாதையில் பல நாள் தொடர்ந்திருக்கிறேன்!
சிலுவைப் பாதையும் சேர்த்து!
நல்ல மேய்ப்பன் நானே என்றுரைத்த நாதா!இன்று
தொலைந்துப் போன ஆடாய் உணர்கிறேன்!
தொலைவிலிருந்து உமைப் பார்க்கிறேன்!
உமது ஆடைகளைக் களைகிறார்கள்!
பச்சிளம் குழந்தையாய் உமைப் பார்த்தக் கண்கள்
காண மறுக்கின்றன உமது காய்ந்தப் புண்கள்
மீண்டும் இரணமாவதை!
களைந்து எடுத்த மேலாடையை கிழித்தெடுத்துப் பிரித்தனர்
கல் நெஞ்சக்காரர்கள்!
களைத்து நீர் சாய்ந்திருக்க,
இடையன் நான் வான் பார்த்து
காத்திருக்கிறேன்,
வானத்தூதர்காக!
----------------------------------
செபம்:
இரக்கமே உருவான இறைவா!
இந்நாளில், வேலையிடத்தில், வீட்டில், வெளியிடத்தில்,
அவமானப் படுத்தப் படுவோருக்காக வேண்டுகிறோம்!
நாங்களும் மற்றவர் மனம் நோகும்படி
நடக்காமல் இருக்க அருள் புரியும்.
--------------------------------
பதினொன்றாம் நிலை: இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்
ஆணி அறைந்தவனின் வார்த்தைகளில்
அடிப்பணிய மறுக்கும் அடிமைகளையும்
சட்டம் மீறும் குற்றவாளிகளையும்
அவர்கள் கண்கள் நோக்காமல், கடின மனத்தோடு
சிலுவையில் அறைவது எனது பணி!
இரு திருடர்களை
அறைந்த களைப்பில், நான்
இளைப்பார
அழைத்து வந்தார்கள் அந்த
இளைஞனை!
ஆணியை அறையும் முன் கேட்டது அவரின் வார்த்தைகள்
"நினைவில் கொள் உன் செயலை நான் மன்னித்தேன் என!"
ஏசும் கைதிகளைக் கண்டுப் பழகிப் போன எனக்கு
இயேசுவின் வார்த்தைகள் இதயத்தில் ஆணியாய் இறங்கின!
ஆணைப்படி அறைந்தோம் ஆணிகளை
அவர் கைகளிலும் கால்களிலும்!
எலும்பையும்
சதையையும் பிய்த்துக்கொண்டு
அவை இறங்கின!!
அவர் கண்களை முதல்முறையாகப் பார்த்தேன்
அவர் கண்களிலும் மன்னிப்பு தெரிந்தது!
------------------------------
செபம்:
ஓ நல்ல இயேசுவே!
எங்களில் பலர் தங்களின் பண வலிமையால்,
வார்த்தைகளால் எத்தணையோ பேருக்கு துயரம்
விளைவித்திருக்கிறோம்.
நீர் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்து,
எம்மையும் மன்னித்து புது வாழ்வு பெற அருள்புரிந்தருளும்.
---------------
பன்னிரெண்டாம் தலம்: இயேசு சிலுவையில் மரிக்கிறார்!
இயற்க்கையின் வார்த்தைகளில்
கதிரவன் இக்காட்சியை காணப் பொருக்காமல்
கருப்புப் போர்வையில் மறைய
வானம் இருண்டது!
காற்றும்,
இருண்ட இவ்வுலகில்
இருக்கப் பயந்து
வேகமாய் எங்கோ விரைந்தது!
பூமியும் துயர சுமை தாங்க முடியாமல்
பூகம்பமாய் பிளந்தது!
கோயில் திரை கிளிந்தது!
கடல் கொந்தளித்தது!
"என் தந்தையே! என் தந்தையே! ஏன் என்னைக் கைவிட்டீர்!
கடவுளின் மகனின் கடைசி வார்த்தைகள்
வானில் எதிரொலிக்க,
இயற்க்கையாகிய நான்
இயலாமல் நிற்க
இறுதி மூச்சை
இறைமகன்
இயேசு விட்டார்!
---------------------------
செபம்:
சிலுவையில் மரித்த இயேசுவே!
உமது கடைசி மூச்சில் கூட இந்த மனிதக் குலத்தை
மறக்காமல், உமது தந்தையை கருணையுடன்
மன்னிக்கும்படி கேட்டீர்.
எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் உமது
அன்பின் ஆவியால் நிரப்பி வாழ்விலும் சாவிலும்
உமது நாமத்தை பறைசாற்ற அருள் புரியும்.
----------------------------------------------------------------
பதிமூன்றாம் தலம்: இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி
அன்னையின் மடியில் கிடத்துகிறார்கள்
இயேசுவின் அன்பு சீடர் அருளப்பர் வார்த்தைகளில்
"இதோ உன் தாய், இதோ உன் மகன்" என உரைத்து
புது உறவை உருவாக்கி உயிர் விட்டார் என் இறைவன்!
உயிர் கொடுத்த அன்னையின் மடியில்
உயிரற்ற மகனின் உடல்!
தாலாட்டு பாடிய தாய் இன்று
தாளாத துயரத்தில்!
அன்று கபிரியேல் சொன்ன செய்தியை
தயங்காமல் ஏற்றுக் கொண்டாள்.
இன்று ஆறாத வேதனையும்
அமைதியாய் தாங்கிக் கொண்டாள்!
இந்த அன்னைக்கு நான் மகனானது
மகத்தான பரிசன்றோ!
--------------------------------------------
செபம்:
அன்பு அன்னையே!
விசுவாசம், நம்பிக்கை, பரிவு ஆகிய அருள்வரங்கள்
எங்களிடம் நிறைய, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உமது எடுத்துக்காட்டை பின்பற்றி நாங்களும் சிலுவையின்
அடியில் கடைசிவரை நிற்க எங்களுக்கு திடத்தையும்
பக்தியையும் தந்தருள திருமகனிடம் வேண்டிக்கொள்ளும்.
---------------------------------------------
பதினான்காம் தலம்: இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்
லாசரஸ் சகோதரி மார்த்தாள் வார்த்தைகளில்
கல்லறையை மூடிய
கல் தான், உன்
மகத்தான
மனித வாழ்க்கையின்
முற்றுபுள்ளியோ?
நீ இன்றி
இவ்வுலகமே
இருள் சூழ்ந்த
கல்லறையாய் மாறியதோ?
உன் முகம்
காணா
கவலையில்
கதிரவனும்
காலை உதிப்பானோ?
எங்கள்
கண்களின்
கண்ணீர் திரை தான்
இனி என்று
விலகுமோ?
அன்பை விதைத்த உன்னை
வதைத்த இவ்வுலகில்
அன்பு தான் தழைக்குமோ?
உயிரற்ற என் தமயனை
உயிர்ப்பித்த தலைவன் நீ
உன் உயிர் பிரிந்த நொடியில்
என் உயிர் பிரியாததும் ஏனோ?
உயிர்ப்பும் உயிரும் நானே
என்றுரைத்த நாதா
உன் உயிர்ப்பை பறைசாற்றும்
கருவியாய் நான் மாறும்
கிருபையை தாராயோ!
---------------------------
செபம்:
அன்பு இயேசுவே!
நாங்கள் எப்போதெல்லாம் உம்மை
வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாமல்
மறுதலிக்கிறோமோ, அப்போதெல்லாம்
உம்மை கல்லறையில் வைத்து மூடுகிறோம்.
எங்களின் கலங்கிய மனதை குணப்படுத்தியருளும்.
உமது உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டு
என்றும் வாழ அருள் புரியும்.
---------------------------
No comments:
Post a Comment