Friday, December 14, 2007


கிருத்துமஸ்...
நள்ளிரவில் ஒரு நட்சத்திரம்
வழிகாட்ட, நடந்தது ஒரு சூரியோதயம்
நான்கு மன்னர்கள் ஒரு எளிய குடிசைக்குள்
வழிநடத்த வந்த விண்வேந்தனை வழிபட வந்த மூவேந்தர்கள்

கிருத்துமஸ்...
அரண்மனைவாசிகளும் ஆசீர்வாதப் பொருட்களும்
மண்வாசனையும் மண்டியிட்ட மேய்ப்பர்களும்
அசைபோடும் ஆடும் மாடும் ஒட்டகமும்
அருகிருக்க அவதரித்தார் ஆண்டவர் அன்று

கிருத்துமஸ்...
வெறும் கடன் திருநாள் தானே என்றிருப்பர் சிலர்
பெறும் கடன் பெற்று செலவழிப்பர் அன்று பலர்
சிலர் ஏன் பலர் பொருள் மறந்து, கொண்டோம் பொருள் மயக்கம்
அன்றோ,
அரும் கடவுள் தமை நமக்களித்த வாழ்வின் துவக்கம்

கிருத்துமஸ்...
புத்தம் புது ஆடையால் யாரும் ஆவதில்லை புனிதம்
பத்தடி கிருத்துமஸ் மரத்தால் யாரும் அடைவதில்லை இமயம்
பாதி வயிற்றில் படித்தும் பணமின்மையால் பாதியில் நிற்கும் படிப்பும்
இல்லாமையும் இயலாமையும் இல்லாமல் செய்வோம் அது மனிதம்

கிருத்துமஸ்...
அன்று உருவான தெய்வீக திருக்குடும்பம்
இன்று நமை சேர்த்தது நாம் ஒரு குடும்பம்
அன்று இயேசு பிறந்தது ஒரு எளிய குடிலில்
என்றும் அவரை வாழ வைப்போம் நம் இதய குடிலில்
பிறர் அன்பால்,
என்றும் அவரை வாழ வைப்போம் நம் இதய குடிலில்!!!